தமிழ் l English
ABOUT US

உலகை சிருஷ்டி செய்த கடவுள் அந்த சிருஷ்டிக்குள் தானே ஒளியாகவும், வேத ஒலியாகவும் இருந்துகொண்டு உலகனைத்தையும் ரக்ஷிக்கிறார்.

தானே சாஸ்திரமாகிறார். தானே புராண புருஷராகிறார். எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஹானி ஏற்பட்டு அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அவருடைய ஸங்கல்பத்தால் உலகை ரக்ஷிக்க வேண்டி, மஹான்களை தோற்றுவிக்கிறார். எத்தனை எத்தனை மஹா புருஷர்கள் பாரத தேசத்தில் தோன்றி இருக்கிறார்கள். இன்னமும் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

தற்போது கலியின் உக்ரஹத்தால் உலகம் முழுவதும் அதர்மம் தலை தூக்கி மனதை உறைய வைக்கும் அளவிற்கு தாங்கவொண்ணாத பலவிதமான கஷ்டங்கள் ஏற்பட்டு உள்ளது. மக்களின் மனம் நாளுக்கு நாள் கேடடைந்து வருகிறது. செய்யக்கூடாத தவறுகளை எல்லாம் சிறிதும் சிந்திக்காமல் செய்து வருகிறார்கள். இயற்கையை தெய்வமாக நினைப்பதைவிட்டு மாசுபடுத்துகிறார்கள். தெய்வ நிந்தனை செய்கிறார்கள். இப்படியாக தன்னையும் அழித்துக்கொண்டு உலகையும் கெடுத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் ஜெகத்குருவான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட 68வது பீடாதிபதியாக ஸ்ரீ ஆதிசங்கரரின் மறு அவதாரமாக ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சாந்த ஸ்வரூபியாக, அருள் ஜோதியாக, தபோதனராக, கருணைக் கடலாக, ஸர்வஸம்பன்னராக தோன்றி நம்முன்னேயே வாழ்ந்து உலகை வாழவைக்கக் கூடிய அவ்வளவு தர்மங்களையும் ஓயாமல் ஸநாதனமான தர்மத்தோடு வாரி வழங்கினார்.

அந்த தெய்வத்தால் ஞானத்தை அடைந்தவர்கள் எத்தனையோ பேர்கள். அந்த பக்தர்கள் எல்லாம் பாரத தேசத்தில் மூலைக்கு மூலை எத்தனையோ தர்மங்களை செய்து வருகின்றனர். அவர் அருளால் அவர் தாள் பணிந்தவர்களில் நாமும் இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அவருடைய கிருபையினால் சுமார் 38 ஆண்டுகளாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஆன்மீகத் தொண்டு செய்து வரும் பாக்கியம் கிடைத்துள்ளது. நமது பாரத தேசம் இமயம் முதல் குமரிவரை புண்ணிய பூமி ஆகும். இதற்கு புராணங்களில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.

இப்படிப்பட்ட புண்ணிய தேசத்தில் தென்னாட்டில் பஞ்சபூத க்ஷேத்திரங்களில் ஒன்றான அப்பு க்ஷேத்திரமாக திருஆனைக்கா க்ஷேத்திரமாகும். இந்த க்ஷேத்திரமானது ஸ்தல விசேஷம், மூர்த்தி விசேஷம், தீர்த்த விசேஷம் பொருந்தியது. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஸ்வயம்பு விசேஷம், காவேரித்தாய் தன்னை இரண்டாக்கிக் கொண்டு அம்மை அப்பனுக்கு மாலையாக விளங்கி அர்ச்சிப்பது தீர்த்த விசேஷமாக உள்ளது, காவிரி நதியின் மத்தியில் இந்த பிரதேசம் விளங்குவதால் தீபகற்பமாகி ஸ்தல விஷேசமாக உள்ளது. இந்த ஸ்தலத்தில் எந்த ஒரு நல்லகாரியம் செய்தாலும் பன்மடங்கு பலனைக் கொடுக்க வல்லது.